தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண்களை பணிக்கு சேர்த்தார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பெண்களின் பங்களிப்பு தமிழக காவல்துறையில் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது.  இந்நிலையில் ஐம்பதாவது ஆண்டுகள் நிறைவுப் பெற்றதை கொண்டாடும் வகையில் தமிழக அரசு தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு நவரத்தின திட்டங்களை அறிவித்து நடைமுறைப் படுத்தப்பட்டது. 

       மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னையில் கடந்த 17.03.2023-ம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பெண் காவல்துறையினரின் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பெண் காவல்துறையினர் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள்.

மேற்படி சைக்கிள் பேரணியானது இன்று 21.03.2023-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில் பெண்களின் இந்த வீரதீர சைக்கிள் பேரனியை வரவேற்கும் வகையிலும், அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷயாம்ளா தேவி அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தலில் உள்ள ரோவர் கல்லூரி வளாகத்தின் முன்பு சைக்கிள் பேரணியில் வந்தவர்களுக்கு பூக்கொத்து கொடுத்து வரவேற்றும், பெண்களாகிய நாம் தமிழக காவல்துறையில் பணியாற்றுவதில் பெறுமிதம் கொள்ள வேண்டும் எனவும் சிறப்புரையாற்றினார். 

      பின்னர் சைக்கிள் பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டு சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். பின்னர் பேரணி வந்தவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி தளவாய் ஆனந்தன், சிறப்பு காவல்படை பத்தாம் அணி தளவாய் மணிவர்ணன், பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

விஜயகுமார் ,பெரம்பலூர்.